சிங்களே, ராவணா பலய அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு விஜயம்!

Report Print Vanniyan in சமூகம்

சிங்களே மற்றும் ராவணா பலய என்ற பௌத்த அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்று முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர் .

பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள், ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிங்களே அமைப்பை சேர்ந்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இரவு 7 மணியளவில் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடினர்.

மேலும் பௌத்த விகாரை அமைக்கப்படுள்ள பகுதிக்கு எதிரே உள்ள இராணுவ முகாமுக்குள் நீராவியடி பகுதியில் அமைந்துள்ள குறித்த குருகந்தே ரஜமகா விகாரையின் தொன்மையை சொல்லும் தொல்பொருள் சிதைவுகள் இராணுவத்தினரால் அருங்காட்சியகமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டனர்.

கொழும்பில் இருக்கும் பௌத்த பிக்குகளை விட வடக்கு கிழக்கில் வசிக்கும் பிக்குகள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும், தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடும், அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடும் தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.