திடீர் டெங்கு சோதனையில் சிக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனையில் பலருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நேற்றையதினம் மேற்கொண்ட பரிசோதனையின் போது 350 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் 4 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொற்று நோய்களுக்கான பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் ஆரிப் தலைமையில் காரைதீவுக்கான பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து 1500 வீடுகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன் போது பலவீடுகள் துப்பரவு செய்யப்பட்டதுடன் டெங்கு நுளம்பால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக புகை விசிறப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது ஏடிஸ் வகை டெங்கு நுளம்புகள் இனம்காணப்பட்ட 4 வீடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டத்துடன் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான சூழலை கொண்ட 350 வீடுகளுக்கு எதிராக சிவப்பு பத்திரம் வழங்கப்பட்டு ஒருநாள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்முனை பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓய்வு நாட்களில் கூட தொடர்ந்து இரு மாதங்களாக தொடர்ச்சியாக வேலை செய்தும் பொதுமக்கள் பாராமுகமாக இருப்பது வேதனை அளித்த காலம் போய் இப்பொழுது அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்ற விடயத்தை இங்கு மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சட்டநடவடிக்கை எனும் போது உத்தியோகத்தர்கள், பணம் படைத்தவர்கள், செல்வாக்கு படைத்தோர், அரசியல்வாதிகள் என்று எதுவித வேறுபாடுகளும் இன்றி இறுக்கமாக நடவடிக்கைகள் இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.