பொலிஸ் சி.ஐ.டியினர் எனக் கூறி அதிபரின் வீட்டில் கொள்ளை

Report Print Rakesh in சமூகம்

யாழ். பருத்தித்துறை, புலோலியில் அமைந்துள்ள ஓய்வுபெற்ற அதிபர் வீட்டில் 10 பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வீட்டுக்கு முன்பாக சந்தேகத்துக்கிடமாக மூவர் நின்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான ஓய்வுபெற்ற அதிபரிடம் கேட்டபோது, தாம் பொலிஸ் சி.ஐ.டி. என்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் இந்தப் பகுதியால் சென்றதாகவும், அவர்களைத் தேடியே வந்ததாகவும் பதிலளித்தனர்.

இந்தப் பகுதியால் யாரும் அவ்வாறு வரவில்லை எனக் கூறி அவர்களை ஓய்வுபெற்ற அதிபர் அனுப்பிவைத்தார்.

சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு அண்மையில் சத்தம் கேட்பதை உணர்ந்த வீட்டு உரிமையாளர் வீட்டுக் கதவைத் திறந்தபோது, முகத்தை கறுப்புத் துணியால் மூடிக்கட்டிய இருவரும் முகத்தை மூடாது ஒருவருமாக மூவர் அவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தினர். அவரையும், அவரது மனைவியையும் அறையில் அடைத்தனர்.

அதிபரின் மனைவி அணிந்திருந்த தோடு சங்கிலி உட்பட வீட்டில் இருந்த 10 பவுண் நகைகளையும், வீட்டில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய இணைப்பு

யாழ்.பருத்தித்துறைப் பிரதேசத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நகை மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகரை அண்டிய கிராம அலுவலருடைய வீட்டில் நேற்றுப் பிற்பகல் இத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத அரைமணி நேரத்துக்குள், வீட்டின் கதவை உடைத்து, வெளிநாட்டுப் பணம் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் பிள்ளைகளின் உண்டியல் பணம் உட்பட மேலும் 30 ஆயிரம் ரூபாய் என்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

அதேவேளை, பருத்தித்துறை மாதனையில் உள்ள வீடொன்றிலும் வீட்டின் கதவு உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்தபோது, வீட்டின் கதவு உடைத்து 5 பவுண் நகை மற்றும் வீட்டில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருட்டுப் போயுள்ளது.

திருடர்கள் வீட்டின் பின்புறமாக உள்ள கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவங்கள் குறித்துப் பருத்தித்துறைப் பொலஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers

loading...