மனைவியுடன் சென்று கொண்டிருந்த நபரை தாக்கி கொலை செய்து விட்டு கணவன் தலைமறைவு

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை - நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியின் நானுஓயா, சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் பலியான நபருக்கும், அவரை கொலை செய்த நபரின் மனைவிக்கும் இடையில் தகாத உறவு இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனை அறிந்து கொண்ட சந்தேகநபர் மனைவியும், கொல்லப்பட்ட நபரும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த வேளை குறித்த நபரை தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியான நிலையில் சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான நபர் புத்தளம், வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா கைரேகை அடையாளப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...