மட்டக்களப்பு மாவட்டத்தில் காடால் நிலம் மூடப்பட்ட பகுதி குறைவாக உள்ளது! மா.உதயகுமார்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காடால் நிலம் மூடப்பட்ட பகுதி 11.3 வீதமாகவே உள்ள நிலையில், குறைந்தது 25 வீதமாவது இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று வாழ்வாதாரம், கல்வி போன்றவற்றிற்கு முனைப்பு நிறுவனத்தினால் உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினாலும், அமைப்புக்களினாலும் வறுமையில் இருந்து மக்களை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வுதவிகளை சரியாகப் பயன்படுத்தி பயனாளிகள் முன்னேற வேண்டும்.

உதவிபெற்றவர்கள், சிறிய உதவியாவது மற்றவர்களுக்கு வழங்கும் நிலையை அடைய வேண்டும். கையேந்துபவர்களாக இருப்பதனை தவிர்த்து கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும்.

சேமிப்பு பழக்கம் என்பது அவசியமானதொன்று. சேமிப்பு பழக்கத்தினை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும்.

நாட்டில் மரங்களை நடும் திட்டம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறுசிறு குழுக்களும், தனியாரும் மரங்களை நடும் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டாளருள் பத்மநாதனும் ஒருவர். அவரின் செயற்பாட்டிற்கு முனைப்பு நிறுவனம் கௌரவிப்பு கொடுத்திருக்கின்றமை சிறப்புக்குரியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11.3 வீதமான பகுதியே காடால் நிலம் மூடப்பட்டபட்ட பகுதியாக உள்ளது. குறைந்தது 25 வீதமாவது இருக்க வேண்டும். அவ்வகையில், மாவட்டத்தில் மரங்களை அதிகம் நட வேண்டிய தேவை இருக்கின்றது. இதேவேளை மரங்களை நடுபவர்களை பாராட்ட வேண்டிய கடப்பாடும் உள்ளது.

எல்லோரும் ஒன்றிணைந்து, குறைந்தது எமது பிறந்த நாளிலாவது மரத்தினை நட வேண்டும். சிலர் மரங்கள் இருப்பதை சுமையாக நினைக்கின்றனர். அவற்றினை வெட்டுகின்றனர். மரங்கள் அழிக்கப்படுவதனால் பிரதிகூலங்களையே எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.