கருணா சுதந்திரமாக திரியும் போது அரசியல் கைதிகளுக்கு ஏன் சிறை? ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த சிங்கள சட்டத்தரணி

Report Print Vethu Vethu in சமூகம்

சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் உட்பட இராணுவத்தினரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் ஒரே நேரத்தில் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுனில் ரத்நாயக்க உட்பட இராணுவத்தினரை மாத்திரம் விடுவித்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யக்கூடும் என்பதனால் அரசியல் கைதிகளை சேர்த்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருணா, கே.பி சுதந்திரமாக இருக்க முடியும் என்றால் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் 70 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ரோயல் பார் வழக்கிற்கு தொடர்புடைய அன்டனி என்ற கோடீஸ்வர வர்த்தகரின் மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டார்.

எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலருக்கு மத்தியில் ஒருவருக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்குவது என்ன நியாயம் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மைத்திரி அதற்கு சாட்சியளிக்க வேண்டும்.

சமகால ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் அதே நிலைமை ஏற்படும். போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் சிறையில் உள்ளனர். சுனில் ரத்நாயக்க மாத்திரம் சிறையில் இல்லை. 4 சிரேஷ்ட இராணுவத்தினர் சிறையிலேயே உள்ளனர். அந்த நால்வருக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்கினால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.

அப்படி என்றால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க மாட்டீர்களா? சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமா மன்னிப்பு வழங்கப்படும்? இதனால் எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி அரசியல் கைதிகள் 70 பேர் உட்பட இராணுவத்தினரை விடுவிக்குமாறு மதிப்பிற்குரிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...