இராணுவத்துக்கு எதிராக மனு: முகாமுக்குள் வைத்து இளைஞர் விசாரணை - சரவணபவன் எதிர்ப்பு

Report Print Rakesh in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவரை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பனை தென்னைக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரிய இளைஞரின் வீடு தேடிச் சென்ற இராணுவத்தினர், அவரை இராணுவ முகாமுக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதி இளைஞர்களிடத்தில் அச்சநிலை ஏற்பட்டது. இதன்காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவத்தினருக்கு எதிராக குறித்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேற்றையதினம் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம், சுழிபுரம் - பாணாவெட்டிப் பகுதியில் பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் கள்ளுத் தவறணை நீண்ட காலமாக இயங்கி வருகின்றது. அந்தப் பகுதி தற்போது அதிகளவு மக்கள் வசிக்கும்இடமாக மாறியுள்ளது. அத்தோடு புதிய அபிவிருத்திப் பணிகளும் அங்கு இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், தவறணைக்கு வருபர்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாக கூறப்படுகின்றது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள வள்ளுவர் சனசமூக நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளுத் தவறணையைப் பாணாவெட்டிச் சந்தியிலிருந்து அகற்றுமாறு சங்கானைப் பிரதேச செயலகத்தைக் கோரி, மனுவொன்றையும் கையளித்திருந்தனர்.

பனை, தென்னைக் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவர்களையும், சனசமூக நிலையத்தினரையும் அழைத்த பிரதேச செயலகம் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தது.

பனை, தென்னைக் கூட்டுறவுச் சங்கத்தின் காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் பாணாவெட்டிப் பகுதியில் தற்காலிகமாகவே அந்தக் கள்ளுத் தவறணை இயங்குகின்றது என்ற வாதத்தை பனை, தென்னை அபிவிருத்தி சங்கத்தினர் முன்வைத்திருந்தனர்.

நிலைமைகளை ஆராய்ந்த சங்கானை பிரதேச செயலகம் பனை, தென்னை அபிவிருத்தி சங்கத்துக்குச்சொந்தமான காணியை இராணுவத்தினர் விடுவிக்கும் வரை, பாணாவெட்டியில் உள்ள கள்ளுத் தவறணையால் மக்களுக்கு எந்தவித இடையூறுகளும் வரக்கூடாது. கள்ளுத்தவறணையின் சுகாதாரம் ஒழுங்காகப் பின்பற்றப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

சுழிபுரத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தே வள்ளுவர் சனசமூக நிலையத்தினர் பிரதேச செயலகத்துக்கு மனுக் கொடுத்துள்ளனர். சனசமூக நிலையத்தில் உள்ள இளைஞர் ஒருவர்தான் இதற்கு சூத்திரதாரியாக உள்ளார் என்று இராணுவத்தினருக்கு சிலர் தகவல் வழங்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இதன்பின்னர் சுழிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் குறித்தஇளைஞரின் வீட்டை நேற்றுமுன்தினம் மாலை தேடிச் சென்றுள்ளனர். குறித்த இளைஞன் தொடர்பிலும் படையினர் விசாரித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

போர்க் காலத்தில் வீடுகளைத் தேடிச் சென்று இராணுவம் விசாரணைகளில் ஈடுபடுவது போன்ற சம்பவமாகவே மக்கள் அந்தச் சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் கண்களில் இளைஞர் சிக்காததால் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சுழிபுரம் இராணுவ முகாமுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இராணுவ முகாமுக்குச் சென்ற இளைஞரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ முகாமை அகற்றுமாறு மனுக் கொடுக்கவில்லை என்பதை சனசமூக நிலையத்தின் சார்பில் எழுத்துமூலம் தருமாறு கோரி அதைப் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர் இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கும் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று காலை குறித்த பகுதிக்குச் சென்று இளைஞர்களிடம் அது தொடர்பில் விசாரித்து அறிந்தார்.

இளைஞர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இராணுவத்துக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இளைஞர்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உடன் அறியத்தருமாறும் தான் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இளைஞர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers