போருக்கு பின்னர் விவசாய வழி முறைகள் மாறி விட்டது!

Report Print Ashik in சமூகம்

அழிந்து வருகின்ற பாரம்பரிய வழிமுறைகள் மீண்டும் எமது சந்ததியினருக்கு கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், உழவர் விழாவும், முத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று காலை 11 மணியளவில் மந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,

போருக்கு பின்னர் விவசாய வழி முறைகள் எல்லாம் மாறிவிட்டது. அந்தவகையில் பாரம்பரிய விவசாய வழி முறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமாக இருந்தால் பாரம்பரிய விவசாய வழி முறைகளோடு வாழ்ந்த மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட வேண்டும்.

அவர்களின் ஊடாக மீண்டும் பாரம்பரிய விவசாய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும். என்பதே எமது எதிர்பார்ப்பு.

தற்போது கலை, கலாசாரம் எல்லாம் மலிங்கடிக்கப்பட்டு விட்டன. எதனை எடுத்துக் கொண்டாலும் இணையத்தளமும், கையடக்கத் தொலைபேசியிலும் பொழுது போகின்றது. ஆனால் யாருமே இந்த விழாக்களைப் பற்றி நினைப்பதில்லை.

அக்காலத்தில் நெல் வெட்டும் போது ஒரு பாடல், பிள்ளை பிறந்தால் ஒரு பாடல், ஒவ்வொரு தொழில் துறைகளுக்கும் ஒரு பாடல், இறந்தால் ஒப்பாரி, இவ்வாறு கலாசாரங்கள் அழகான முறையில் காணப்பட்டது. ஆனால் இப்பபோது எல்லாமே கைமாறி விட்டது.

இக்கலாசார வழி முறைகள் எமது சந்ததிகளுக்கும், தமிழர்களின் கலாசார விழுமியங்கள் அடுத்த சந்ததிகளுக்கும் செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டதோடு, கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.