தற்கொலைதாரி புலஸ்தினியின் மரபணு பரிசோதனையில் குழப்பம்! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Report Print Varunan in சமூகம்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற்பாகங்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கை (DNA) பொருந்தவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனையை மீண்டும் ஆராய்வதற்காக, நீதிமன்றிற்கு மரபணு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரும் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை இரண்டாம் கட்ட 6 சந்தேகநபர்களுக்கான விசாரணையின் போது, விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி நீதிமன்றில் தோன்றினார்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்பதை நீதிவானின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றிருந்தார்.

இதையடுத்து நீதிவான் மேற்படி சம்பவத்தில், மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குறித்த மரபணு பரிசோதனை தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கட்டளையிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக உயிரிழந்தவர்களின் மரண விசாரணை தொடர்பான வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலுடன், பல்வேறு கேள்விகளுக்கு பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல்சமரவீர வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த வீடு அதை அண்டிய வெளியிடங்கள் உள்ளடங்கலாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் அவ்விடத்தில் தடயப்பொருட்களை சேகரித்ததுடன் காயமடைந்த நிலையில் ஒரு பெண், குழந்தை ஆகியோரை மீட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிகிச்சையின் பின்னர் அவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது தகவல் படி,

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னிஃமுகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும் முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான் மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை

இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்,

முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்)

அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி)

மேற்குறித்த 17 பேர் உள்ளடங்களாக மரணமாகியதுடன் காயங்களுக்கு உள்ளாகினர் என அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களது பிரேத பரிசோதனை யாவும் கடந்த ஏப்ரல் 28,29ஆம் திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடத்தப்பட்டிருந்தன.

அதன் பின்னர் உயிரிழந்தவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொதுமயானத்தில் 2019/5/2 அன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

You may Like this video


Latest Offers