ஹரோ நகரசபையில் நடைபெற்ற ஹரோ தமிழர்களின் தைப்பொங்கல் விழா

Report Print Dias Dias in சமூகம்
302Shares

தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழா இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்களால் அண்மையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா 10வது ஆண்டாக ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான கிருஷ்ணா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மங்கல வாத்தியதுடன் ஹரோ நகர மேயர் நிதின் பரேக் (Nitin Parekh) உட்பட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் நகரசபை மன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு தைப்பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டது.

ஹரோ நகரத்தில் இயங்கும் நடனப் பள்ளிகளில் கற்கும் பிள்ளைகளின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை பயிலும் மாணாக்கர்களின் இசை நிகழ்ச்சிகள், முதியோர்களின் கிராமிய நடனம் என்பவற்றுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

தைப்பொங்கல் விழாவில் ஹரோ நகர மேயர் நிதின் பரேக் (Nitin Parekh), கவுன்சில் தலைவர் கவுன்சிலர் கிரஹம் ஹென்சன்(Graham Henson) லண்டன் அசெம்பிளி (London Assembly) உறுப்பினர் நவின் ஷா (Navin Shah) கவுன்சிலர் கிருஷ்ணா சுரேஷ், கவுன்சிலர் சசிகலா சுரேஷ் ஆகியோருடன் முன்னாள் மேயர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் விழாவில் பெருமளவிலான ஹரோ வாழ் தமிழ் மக்களுடன் ஆங்கிலம், குஜராத்தி, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீக்கியர், சோரோஸ்ட்ரியன் மக்களும் கலந்துகொண்டமை இன, மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

தமிழ் வண்ணமயமான கலாசாரம், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் தைப்பொங்கல் விருந்து ஆகியவற்றை ஹரோவிலுள்ள பல்வேறு சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும், ஹரோ நகரில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தைகள் தங்களது வேரை மறக்காமல் இருக்கவும் இந்தப் தைப்பொங்கல் விழா ஹரோ நகரசபை மன்றில் பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

ஹரோ நகரத்தில் 3வது பெரிய சமூகம் தமிழர்கள் என்பதால், வருங்கால தலைமுறையினர் தமிழ் மொழியைக் கற்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், கலாசாரம் மற்றும் நமது பாரம்பரியத்தை ஆதரிப்பதற்குமாக கவுன்சில் தலைவர் கவுன்சிலர் கிரஹம் ஹென்சன் அவர்கள் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக (Tamil Heritage Month) அங்கீகரித்துள்ளார்.

பிரித்தானியாவில் முதன்முறையாக 2020 ஜனவரி 15 ஆம் திகதி அன்று ஜனவரி மாதத்துக்கு தமிழ் பாரம்பரிய மாதமாக (Tamil Heritage Month) அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பது பெருமைமிக்கதாகும்.

தைப்பொங்கல் விழாக்களுக்கு தங்களது பங்களிப்புக்களை வழங்கிய ஊடகவியலாளர்கள், ஒளி,காணொளிப் படப்பிடிப்பாளர்கள், கலைஞர்கள், நடன ஆசிரியர்கள், தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள், தமிழ் முதியோர் மைய நிர்வாகிகள், ஹரோ நகரத் தமிழ் விளையாட்டு அமைப்புக்கள், விழா உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்தப் பத்தாவது ஆண்டில் விருதுகள் வழங்கப்பட்டன.