குண்டுகளால் தாக்கப்பட்ட கிளிநொச்சி மக்களை வரியால் தாக்காதே! சாகும்வரை போராட்டத்தை ஆரம்பித்துள்ள வர்த்தகர்

Report Print Suman Suman in சமூகம்
79Shares

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகளவில் அறவிடப்படும் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதிகரித்த ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சி நகரில் வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச சபையால் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து ஆதனவரி அறவிப்பட்டு வருகின்றது. இந்த ஆதன வரியானது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு பத்து வீதமாக அறவிடப்பட்டு வருகின்றது.

ஆதனவரி அதிகரிப்பானது போரினால் பாதிக்கப்பட்டு படிப்படியாக முன்னேறி வருகின்ற மக்கள் மீது சுமத்தப்படுகின்ற பெரும் சுமையாகும் எனத் தெரிவித்தே, வர்த்தகரான கு.மகேந்திரன் ஆதனவரியை நான்கு வீதமாக குறைக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இப்போராட்டத்திற்கு வர்த்தக அமைப்புகள், மக்கள் அமைப்புக்கள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, பொதுமக்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரைச்சி பிரதேச சபையே! சுமத்தாதே! சுமத்தாதே! மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே! மீண்டெழும் கிளிநொச்சியை வரிச்சுமையால் நசுக்காதே! நியாயமான வரியை அறவிடு, மக்களுக்கு சேவையினை வழங்கு! மரத்தால் வீழ்ந்த மக்களை மாடு மிதித்த கதையாய் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே! மக்களுக்கான சேவைகளை வழங்காது வரிகளை மாத்திரம் அறவிடாதே!கழிவுகளை அகற்ற முடியாத உனக்கு அதிகரித்த ஆதனவரி எதற்கு? இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த ஆதன வரியை அறவிடுவது நியாயமா?குண்டுகளால் தாக்கப்பட்ட கிளிநொச்சி மக்களை வரியால் தாக்காதே! வரி மக்களின் நலனுக்காகவா உனது வசதிக்காகவா அறவிடுகிறாய் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.