திருகோணமலை பொதுவைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்குரிய அனுமதியை பெறவேண்டியுள்ளதாகவும், நோயாளர்களை அனுமதிப்பதற்கு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் நோயாளர்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர்காவு வண்டியில் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக நோயாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் நேரடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்திற்கு வரும் நோயாளர்கள் பலமணிநேரம் காத்திருந்த பின்னரே அனுமதிக்க படுவதாகவும், நோயாளர்கள் அனுமதிக்கும் அறைக்குள் ஒரே ஒரு வைத்தியர் மாத்திரம் கடமையில் உள்ளதாகவும் இதனாலேயே தாமதங்கள் ஏற்படுவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அதிகளவில் பற்றாக்குறையாக காணப்படுகின்ற போதிலும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இந்த பொது வைத்தியசாலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த வைத்தியசாலையின் பற்றாக்குறைகள் இன்னும் நிவர்த்திக்க படாமல் இருப்பதாகவும், இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊடாக மத்திய அரசின் சுகாதாரத் திணைக்களத்தின் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையை நம்பி திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்லாது ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இருந்தும் நோயாளர்கள் இங்கு வருகை தருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் மேலும் தெரிவித்தார்.

எனவே நோயாளர்களின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர்கள் அனுமதிக்கும் அறை போன்ற இடங்களுக்கு வைத்தியர்களை நியமிப்பதுடன் சிற்றூழியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதை நிவர்த்திக்கு மாறும் நோயாளர்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.