காணிகளை விடுவிக்குமாறு கோட்டாபய, மஹிந்தவுக்கு மனு! வடக்கு ஆளுநர் ஊடாக அனுப்பிவைப்பு

Report Print Rakesh in சமூகம்

தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு வழங்கவென்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் மனுக்களைக் கையளித்துள்ளனர்.

ஏற்கனவே காணி விடுவிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், காணி விடுவிக்கப்பட வேண்டிய மக்கள் சார்பாகவும் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காணிகள் விடுவிக்கப் பட்ட மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், "குறிப்பிட்டளவு மக்களின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

நாம் பலத்த இடர்பாடுகளுக்குள் உள்ளோம். பயந்த சூழ்நிலையில் வாழ்கின்றோம். விடுவிக்கப்படாத மிகுதிக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிக்கப்படவேண்டிய மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், "எமது காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எமது காணி விடுவிப்புத் தொடர்பில் நல்லதொரு பதிலை வடக்கு ஆளுநரிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஆளுநரிடமிருந்து முறையானதொரு பதில் கிடைக்காதுவிட்டால், தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

காணி விடுவிப்புக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியுடன் மூன்று வருடமாகின்றது.

அதற்குள் ஆளுநரிடமிருந்து நல்லதொரு பதில் கிடைக்காதுவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...