உலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன?

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலக மக்களை கிலி செய்யும் வகையில் மற்றொரு வைரஸ் புதிதாக பரவி வருகின்றது. சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது. அதுவே 2019 - நொவல் கொரோனா வைரஸ் (2019 - nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட இவ் வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரையும் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பதிவாகி இருக்கின்றது.

சீனாவின் மத்திய மாகாணமான உஹான் மாநிலத்தில் முதலில் இனம் காணப்பட்ட இவ் வைரஸ் தற்போது அந்த நாட்டின் 13 மாநிலங்கள் வரையும் பரவியுள்ளது.

இன்று வரையில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்கள் அனைவரும் உஹான் மாகாணத்திற்கு சென்று வந்தவர்கள் என்பதை சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

என்றாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு கடந்த வியாழக்கிழமை வரையும் 571 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல், சார்ஸ், சிகா வைரஸ்களின் சவாலுக்கு பின்னர் இப்போது 2019 - நொவல் கொரோனா வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக விளங்குகின்றது.

உலக மக்கள் மத்தியல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பிரதான குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961ஆம் அண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடிமலுக்குள்ளாகி இருந்த நபர் ஒருவரின் நாசித் துவாரங்களில் பெற்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இவ்வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வைரஸ்கள்தான் மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் தற்போது அதில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது.

தற்போது மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்ற 2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு திரிபாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடி தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

என்றாலும் இவ் வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும்.

இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.

சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.

இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரஸ் தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.

சீனாவுக்கு செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் விஷேட கவனம் செலுத்துகின்றன.

இதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் விஷேட மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வட கொரியா தமது எல்லைப் பகுதிக்கு வரவென சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியிருந்த அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அத்தோடு அவுஸ்திரேலியாவுக்கு அதிகளவு உல்லாசப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருவதால் அந்நாடு தம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 2002இல் தென் சீனாவில் தோற்றம் பெற்று உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸ் காரணமாக 800 பேர் உயிரிழந்தனர். 5000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 650 பேர் சீனா, ஹொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் கனடாவில் 44 பேரும், தாய்வானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்ஸில் 2 பேரும் என்றபடி இறந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே சீனாவில் தோற்றம் பெற்று உலக மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கும் 2019 - நொவல் கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்த்து கொள்வதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்படுவது மக்களின் பொறுப்பாகும்.