இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்! குருதி மாதிரியில் தொற்று இல்லையென உறுதி

Report Print Kanmani in சமூகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் குறித்த வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகவில்லை என முதலாம் கட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரள்ளை வைத்திய ஆராச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு பேரின் குருதி மாதிரியிலும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது கட்ட வைத்திய பரிசோதனைகளை உறுதிப்படுத்த இரண்டாம் கட்ட வைத்திய பரிசோதனை இடம்பெறுவதாகவும், அந்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சீன பெண் ஒருவரும், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருமே நேற்று மாலை இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் இருவரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் கல்வி கற்ற நிலையில் இலங்கை திரும்பிய ஒரு மாணவியும், சுற்றுலா மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த சீன பெண்ணுமே இவ்வாறு கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு ஆணும், சீன நாட்டு பெண்ணும் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.