நீதித்துறை சுயமாக செயற்படுவதற்கு பலர் தடையாக உள்ளனர்: சுமந்திரன்

Report Print Yathu in சமூகம்
92Shares

இந்த நாட்டிலே நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு அருகதை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எங்களுக்கு எதிராக பல குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதியை தேடுகின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம். அதிலே நாங்கள் கவனம் உள்ளவர்களாகவும், கைவிடாதவர்களாகவும் நீதியை நிலைநாட்டியே தீருவோம் என்ற வைராக்கியத்துடன் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.

காலங்கள் கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் எத்தனை தசாப்தங்கள் ஆனாலும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை கண்டே தீருவோம்.

கடந்த ஐந்து வருட காலத்தில் மீள்எழுச்சிக்காக எங்களுடன் இணைந்து பயணிக்கக் கூடிய அரசாங்கம் வந்த காரணத்தினாலே அதற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். ஏனெனில் அதற்கு முன்பிருந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எதையும் செய்ய முடியாதபடி எங்களை அடக்கி ஒடுக்குகின்ற ஒரு அரசு இருந்தது.

அதை அகற்றி நாங்கள் பயணிக்கக்கூடிய வகையில் ஓர் அரசை அமைப்பதற்கு நாங்கள் உதவி செய்தோம். அதை பாதுகாத்தோம். அதுவும் நாங்கள் எதிர்பார்த்த எல்லாவற்றையும் செய்யவில்லை. ஆனால் ஒரு சுதந்திரமான, திறந்த ஒரு சூழலை எங்களிற்கு உருவாக்கி கொடுத்தது.

பயமில்லாமல் வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் சில சில விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த விசாரணைகளில் அதிகளவில் படையினரும், புலனாய்வாளர்களும் இருந்தனர். இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நாட்டை காட்டிக்கொடுப்பதாகவும், படையினரை காட்டிக்கொடுப்பதாகவும் பிரச்சாரங்களை செய்தது.

ஜனாதிபதியாக பொறுப்பேற்று மறுநாள் படையினரை விடுவிப்பதாக ஜனாதிபதி அன்று தெரிவித்திருந்தார். இவ்வாறு தற்போது பலர் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விடுவிப்பினை இலக்காக கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வாறு வரும் என அறிந்தே இவ்வாறு நீதியில் தலையீடு செய்து பலரை விடுவிக்கின்றனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவாறு தடுக்கின்றனர்.

நீதித்துறை சுயமாக செயற்படாதவாறு பலர் செயற்படுகின்றனர். நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட விடுகின்றார்கள் இல்லை என பலர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

முக்கியமாக வழக்குகள் இவ்வாறு நடத்தப்படாது தடை செய்யப்படுமாக இருந்தால், இதைவிட நீதித்துறையில் தலையீடு வேறு எதுவுமாக இருக்க முடியாது, பல சம்பவங்கள் இருக்கின்றன.

உங்களுடைய பிரதேசங்களிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் தவிர்த்து கண்துடைப்பிற்காக கொழும்பிலே கடத்தப்பட்ட காரணத்தினாலே அந்த ஒரு வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

அந்த ஒரு வழக்கு கூட நேரடியாகவே இராணுவம் கடற்படை என்று சொல்லி படைத்தரப்பை குற்றஞ்சாட்டி அதைக்கூட தொடர்ந்தும் நடத்த விடாமல் தடுக்கின்ற செயற்பாடு புதிய ஆட்சியிலே இருக்கின்றது.

இது அவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து செய்கின்ற கைங்கரியமாக இருக்கின்றது. இது இப்படியாக நடக்குமாக இருந்தால், இந்தநாட்டிலே நீதித்துறை சுயாதீனமானது என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களிற்கு அருகதை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.