புதூர் சந்தியில் விசேட சோதனை: மூவர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம், புதூர் சந்தியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கடற்படை சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புதூர் சோதனை சாவடியில் வழிமறித்து இராணுவத்தினரும், பொலிஸாரும் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது 5 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை குறித்த சோதனை சாவடியில் வைத்து சோதனை செய்த போது 2 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவும், கைதான மூவரும் புளியங்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.