தேசிய மரநடுகைத் திட்டம் கிழக்கு ஆளுநரினால் ஆரம்பித்து வைப்பு

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் தேசிய மரநடுகைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி - மஜ்மாநகர் கிராமம் மற்றும் வாழைச்சேனை - நாசிவந்தீவு கிராமத்திலும் இன்று குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் பசுமையான மாகாணம் எனும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை உதவி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, கிழக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாம் இணைப்பு

நாட்டில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் சீர்கேடு காரணமாகவும், பல மரங்கள் அழிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய மர நடுகைத் திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

வாழைச்சேனை, கும்புறுமூலை சமூகசேவை திணைக்களத்தின் தொழில் பயற்சி நிலையத்தில் இன்று மரம் நடுகை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இருபது இலட்சம் மரங்களை உருவாக்கும் திட்டத்தில் இன்றைய தினம் எண்பதாயிரம் மரங்களை நடுகின்றனர். இது ஒரு பெரிய வேலைத்திட்டமாகும்.

எமது புதிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமாக இருந்தாலும் எமது மக்களிடையே ஒரு பழக்கம் இருக்க வேண்டும்.

மரம் நடுகையோடு பசுமை என்ற திட்டம் முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் அழிந்ததை நீங்கள் அறிந்தீருப்பீர்கள்.

எமது நாட்டில் நாம் மரங்களை பாதுகாக்க வேண்டும். எமது நாட்டில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் சீர்கேடு காரணமாகவும், பல மரங்கள் அழிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய மர நடுகைத் திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் சுவாசிக்கும் ஒட்சிசன் எங்களால் வளர்க்கப்படும் மரங்களில் மூலம் கிடைக்கும் ஓட்சிசன் நமக்கு பயனுள்ளதாக அமையும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள அரசாங்க அதிபருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். அத்தோடு ஆளுநரும் பெண் தான், மாவட்ட அரசாங்க அதிபரும் பெண்தான், இங்குள்ள நீங்களும் பெண்கள் தான் அதிகம் உள்ளீர்கள். எனவே நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமான அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.