மட்டக்களப்பில் நாட்டப்பட்டுள்ள மரங்களை பொதுமக்கள் பொறுப்பெடுக்க வெண்டும்!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டப்பட்டுள்ள மரங்களை பொதுமக்கள் பொறுப்பெடுத்து பராமரிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, கும்புறுமூலை இன்று கிழக்கு மாகாணத்தில் பசுமையான மாகாணம் தேசிய மரநடுகை திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்று முதலாவதாக கலந்து கொண்டுள்ள பசுமையான மாகாண மரநடுகைத் திட்டம் என்பதால் மகிழ்ச்சியடைகின்றேன்.

உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றம் ஏற்படுதால் பாதிப்புக்கள் இடம்பெறுகின்றது. மரங்களின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மரங்களின் மூலமே நமக்கு மழை கிடைக்கின்றது.

பசுமையான மாகாணம் தேசிய மரநடுகை திட்டத்தின் மூலம் மூன்று வருடத்தில் இருபது இலட்சம் மரங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் எண்பதாயிரம் மரங்கள் இன்றைய நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து செயலகப் பிரிவுகளிலும் நடுகை செய்யப்படுகின்றது.

மரங்களை நாட்டி விட்டு செல்வது மாத்திரம் இல்லாது நாட்டிய மரத்தினை நாம் பொறுப்பேற்க வேண்டும். இதனை பராமரிக்கும் பொறுப்பினை பொதுமக்கள் செய்ய வேண்டும்.

இதில் வரும் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றது. எனவே பசுமையான மாகாணம் என்ற நிகழ்வு வெற்றிகரமாக முன்னோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ.பிரகாஷ், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை உதவி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, கிழக்கு மாகாண அளுனர் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.