கிரவல் மற்றும் மணல் அகழ்விற்கான எந்தவித அனுமதிகளும் வழங்கப்படவில்லை!

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் கிரவல் மற்றும் மணல் அகழ்விற்கான எந்தவித அனுமதிகளும் தற்போது வழங்கப்படவில்லை என துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.லதுமீரா தெரிவித்துள்ளார்.

இன்று அவரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

துணுக்காய் பகுதியிலிருந்து வெளியிடங்களுக்கு கிரவல் மற்றும் மணல் என்பன கொண்டு செல்வதற்கான அனுமதிகளோ அல்லது அகழ்வுகளுக்கான அனுமதிகளோ வழங்கப்படவில்லை.

குறித்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைகளுக்காக மாத்திரமே குறிப்பிட்ட பயனாளிகளுக்கு ஒரு நாளுக்கான அனுமதிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுவெட்டுவான் முதிரைச்சோலை மற்றும் கொக்காவில் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் கிரவல் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இதனால் தமது கிராமங்களுக்கான பிரதான வீதி முழுமையாக சேதமடைந்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதிமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை கோட்டைகட்டியகுளம், ஐயன்கன்குளம் ஆகிய கிராமங்களிலும் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் தமது கிராமங்களில் வீதிகள் கடுமையாக சேதமடைந்து வருகின்றன. இது தொடர்பில் எந்த அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வருவதில்லை என்றும் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.