மன்னார் நகர சபையின் 2020ம் ஆண்டிற்கான முதல் அமர்வு

Report Print Ashik in சமூகம்

கடந்த வருடம் மன்னார் நகர சபை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை சபையின் நிதியில் இருந்து முன்னெடுத்திருந்தது.

குறித்த திட்டங்களுக்கு ஆதரவு வழங்கிய சபையின் சக உறுப்பினர்கள் அனைவரும் இவ்வருடம் இடம் பெறும் திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 23வது அமர்வும், 2020ம் ஆண்டிற்கான முதல் அமர்வும் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் மன்னார் நகர சபை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை சபையின் நிதியில் இருந்து முன்னெடுத்திருந்தது. குறித்த திட்டங்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி இருந்தீர்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சபையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்திட்டங்களுக்கு உங்களின் பூரண ஆதர தேவை.

வரவு,செலவுத் திட்டங்களுக்கு அமைவாக உரிய காலப்பகுதிக்குள் நாங்கள் வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு முதலாவது காலாண்டு பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து நாம் இந்த சபையிலே கலந்து ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணைகளை மூன்று நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த பிரேரணையில் கூறப்படுகின்ற விடயங்கள் மாத்திரம் நாங்கள் அறிக்கையாக தயாரிக்க வேண்டும். விவாதிக்கின்ற விடயங்கள் அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

பிரேரணையில் முன் வைக்கப்படுகின்ற விடயங்கள் மாத்திரமே கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும் என தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

இதே வேளை பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக வட்டார ரீதியில் வீதி புனரமைப்பு உற்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு, கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் குறை நிறைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.