நீதிமன்றத்தில் ஆஜராகாத இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு எதிராகப் பிடியாணை

Report Print Vanniyan in சமூகம்

நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகாத இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் வட்டுவாகல் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.சண்முகலிங்கம், ஆகியோர் மீது முல்லைத்தீவுப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனை கைது செய்யுமாறு நீதிவான் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்து இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 18ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பித்த நிலையில் இன்று 28.01.2020 அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றி ஆஜராகி பிடியாணை இரத்து செய்யப்பட்டதுடன் மீண்டும் நீதிமன்றில் மே மாதம் 18ம் திகதி முன்னிலையாகுமாறு திகதியிடப்பட்டுள்ளது.