அதிபர் மற்றும் ஆசிரியரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி சாமிமலையில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட சாமிமலை கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உட்பட மேலும் ஒரு ஆசிரியரை உடன் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பாடசாலையின் தற்போதைய அதிபர் பல மாதங்களாக ஆசிரியரொருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், குறித்த ஆசிரியர் நேற்று நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதனால் பாடசாலைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அதிபர் இப்பாடசாலைக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்தாலும் பாடசாலையின் வளர்ச்சிக்காக உரிய பங்களிப்பை வழங்கவில்லை என்றும், தனிப்பட்ட தேவை, விருப்பங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளார் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளால் பாடசாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அத்துடன் எமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதால் தமது கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பேற்படுவதாகவும் மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பாடசாலையில் 37 ஆசிரியர்களும், 1000இற்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்விப் பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers