மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம்! சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மட்டக்களப்பு, ஆரையம்பதி - ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த முகாமில் சஹ்ரானின் சகோதரர் தங்கியிருந்ததாகவும், பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்ற புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்.

இதனடிப்படையில் நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த ஆறு பேர் குற்ற புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் நான்கு பேர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும், ஏனையவர்கள் நிகவரெட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு பேரும் இன்று குற்றத்தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மார்ச் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற புலனாய்வுத் துறையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...