சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவ முகாமில்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் தங்கியிருந்த இலங்கை மாணவர்களும், அவர்களின் உறவினர்களும் பண்டாரவளை - தியத்தலாவ இராணுவ முகாமை சென்றடைந்துள்ளனர்.

இன்று பகல் 12 மணியளவில் அவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்காக அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட அறைகளை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை ஏற்றிய விமானம் இலங்கையின் மத்தள விமான நிலையத்தை இன்று காலை 7.30 அளவில் வந்தடைந்தது.

இதனையடுத்தே மருத்துவ சோதனைகளின் பின்னர் மாணவர்களும் உறவினர்களும் தியத்தலாவைக்கு பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களை ஏற்றிவருவதற்காக யுஎல் 1423 என்ற இந்த விமானம் நேற்று மாலை 3.55க்கு இலங்கையில் இருந்து வுஹான் நோக்கி புறப்பட்டது.

பின்னர் அங்கு இரவு 11.23இற்கு தரையிறங்கிய நிலையில் நிர்க்கதியாக இருந்த 33 இலங்கை மாணவர்களையும், அவர்களின் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு இன்று காலை சீன நேரப்படி அதிகாலை 4.05க்கு இந்த விமானம் வுஹானில் இருந்து புறப்பட்டது.

மத்தள விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்த நிலையில் அதில் வந்துள்ளவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதற்கான முழுமை ஏற்பாடுகளும் படையினரால் செய்யப்பட்டுள்ளன. இவர்களுடன் சீனாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 660 ஆகும்.

இதேவேளை இன்னும் 204 மாணவர்கள் சீனாவின் ஏனைய பகுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களும் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.