பிரான்ஸ் விமான தயாரிப்பாளர் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in சமூகம்

பிரான்சின் எயார்பஸ் விமான தயாரிப்பாளர் தமது முகவர்களின் ஊடாக இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு தமது ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காகவும் தமக்கு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காகவும் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இலங்கையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு புருனையில் உள்ள எரிவாயு நிறுவனம் ஒன்றின் ஊடாக 2மில்லியன் அமரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் எயார்பஸ் தயாரிப்பாளர் லஞ்சக் குற்றச்சாட்டுக்காக 3.6 யூரோக்களை செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்துக்கு நேற்று லண்டனில் நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

இதுவே உலகில் அதிகூடிய லஞ்ச ஊழலுக்கு எதிரான தீர்மானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்சக்குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

2011 ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே இந்த லஞ்ச கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்வான், கானா போன்ற நாடுகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஊழல்களுக்கு எதிரான அலுவலகத்தின் தகவல்படி எயார்பஸ் நிறுவனம் இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரியின் மனைவியை இடைத்தரகராக தொழிலுக்கு அமர்த்தியிருந்தது.

அவரின் பெயர் மற்றும் பால் அடிப்படையில் பிரித்தானிய ஏற்றுமதி கடன் நிறுவனத்தை பிழையாக வழிநடத்தியதுடன் அவருடைய நிறுவனத்துக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் புருனையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயரில் இயங்கும் நிறுவனத்துக்கு 16.84 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு எயார்பஸ் நிறுவனம் ஏற்கனவே உடன்பட்டு அதில் ஒரு பகுதியாகவே 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ட்ரான்பேரன்சி இன்டர்நேசனல் இலங்கை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில 4 வருட விசாரணையின் பின்னர் எயார்பஸ் நிறுவனம் அமரிக்க,பிரித்தானிய, பிரான்ஸ் அதிகாரிகளுக்கு 3.6 பில்லியன் யூரோக்களை நட்டஈடாக வழங்க உடன்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தம்மால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் இலங்கை நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

எயார்பஸ் உடனான ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய நீதிமன்ற ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், இலங்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள பொறுப்புள்ளவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள இலங்கை அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏயார்பஸ் மற்றும் அதன் முகவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிசெய்ய சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஒபசேகர வலியுறுத்தியுள்ளார்.