பயிலுநர் ஆட்சேர்ப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணிப்பு!

Report Print Kaviyan in சமூகம்

தற்போதைய ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பில் யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல பகுதிகளில் கிராம அலுவலர்களது உதவியாளர்களால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படாது மறுக்கப்பட்டு வருவதாகக் குறை கூறப்படுகின்றது.

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக என அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் (ஓ.எம்.பி) இவ்விடயத்தில் கவனம் செலுத்தாது ஏனோ தானோ என்ற நிலையில் கண்மூடி இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பலராலும் குறை கூறப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக என்ற நோக்கத்துடன் இலங்கையில் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யாத நிலையில் வெறும் பெயரளவிலேயே இயங்கி வருகின்றது.

பிரதேச செயலக ரீதியாக வடபகுதியில் எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக்கூட இவ் அலுவலகம் (ஓ.எம்.பி) கிராம அலுவலர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்வதற்குக்கூட முயற்சிக்காது பல பணியாளர்களுடன் பெயரளவிலேயே இயங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

தற்போதைய ஜனாதிபதியால் நாட்டில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் கிராம அலுவலர்களின் உதவியாளர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் போது யுத்தத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சில பகுதி கிராம அலுவலர்களின் உதவியாளர்களால் அதற்கான விண்ணப்பப் படிவங்களைக் கூட வழங்காது மறுக்கப்பட்டுவருவதாகக் குறை கூறப்படுகின்றது.

ஜனாபதியின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் யுத்தத்தின் போது படையினரால் பிடிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களில் வேலையற்று தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் இருப்பார்களானால் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை காணாமல் போனோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி) அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியும். ஆனால் இக்காணாமல் போனோருக்கான அலுவலகம் எவ்வித செயற்பாடுகளும் இன்றி வெறுமனயே பெயரளவில் இயங்கிவருவதாகக் குறை கூறப்படுகின்றது.