மத்திய ரொமானிய நகரில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை பணியாளர்களுக்கு நேர்ந்த நிலை

Report Print Ajith Ajith in சமூகம்

உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையை சேர்ந்த இரு சிங்கள பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.

டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு சிங்கள இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.

இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு சிங்களவர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உள்ளூர்வாசிகள் தொழிற்சாலையின் உரிமையாளரை சந்தித்து குறித்த இரு சிங்களவர்களையும் பணிகளில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளனர்.

எனினும் தொழிற்சாலையின் உரிமையாளர் அந்த பணியாளர்களை ரொட்டி தயாரிப்பு பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,

உள்ளூர்வாசிகள் குறித்த இரண்டு இலங்கையர்களும் வேண்டாம் என்றும், அவர்கள் தமக்காக தயாரிக்கப்படும் ரொட்டிகளை தொடக் கூடாது என்றும் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் இங்கு வந்து பணியாற்றுவதால் மேலும் பலர் இங்கு வருவார்கள். பின்னர் தமக்கென கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவார்கள்.

இதன்போது தாம் வேறு இடங்களை தேட வேண்டி வரும். அத்துடன் இந்த குடியேறிகள் சீனாவின் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுக்களை கொண்டு வந்துவிடுவர்கள் என உள்ளூர்வாசிகள் கருத்துக்களை கொண்டிருப்பதாக தொழிற்சாலையின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...