கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Report Print Sumi in சமூகம்

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ். மக்கள் பீதியடையத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் மத்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு யாழ். போதான வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்களை அனுமதித்து, விசேட சிகிச்சைகள் அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். பூரண சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு சுகாதார அமைச்சு, உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதனால், யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பீதியடைய தேவையில்லை.

சீன பெண் தவிர்ந்த ஏனைய எவரும், கொரோனா வைரஸ் தொடர்பில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை.

எனவே, கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பயப்பட தேவையில்லை. அத்துடன், முகக் கவசம் அணிய வேண்டிய தேவையும் இல்லை.

சில நேரங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்களுக்கான உரிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரையில் 17 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில் ஒரே ஒரு சீனப் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் இவ்வாறு பரிசோதனை செய்வதற்காக வருகின்றார்கள்.

இந்த பரிசோதனைகள் உரிய முறையில், மிகவும் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. ஆகையால் கொரோனா வைரஸ் பற்றிய எந்தவித பயமும் பொது மக்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...