கிண்ணியாவில் மண் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராகவும், மகமாரூ பிரதான வீதியின் ஊடாக கனரக வாகனம் செல்வதை தடை செய்யுமாறு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கச்சக்கொடுத்தீவு சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு, மகமாரூ மற்றும் நடுவூற்று கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போராடுவோம் போராடுவோம் தடை செய்யும் வரை போராடுவோம் ” "பாடசாலை செல்லும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து” கிராமத்தின் இயற்கை வளத்தை சுரண்டாதே" "கனரக வாகனத்தை உடனடியாக தடைசெய்" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்துக்கு திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.எச்.கமகே கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கான தீர்வினை திங்கட்கிழமை பெற்றுத் தருவதாகவும் 10 பேர் கொண்ட குழு ஒன்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு வருகை தருமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கனரக வாகனங்கள் செல்வதனால் சுகாதார பிரச்சினைகள் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.