சிறந்த மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவனிற்கு அன்பே சிவம் விருது

Report Print Sumi in சமூகம்

மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவனிற்கு அகில இலங்கை சைவ மகாசபை அன்பே சிவம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சைவத்தமிழர்களின் தைப்பூச தினமான நேற்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் குழந்தை பாக்கியம் தடைப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான பெற்றோருக்கு உரிய சிகிச்சை வழங்கியதன் மூலம் அவர்கள் சந்ததி தழைக்க மனிதநேயத்துடன் மகத்தான மருத்துவப் பணி செய்த முதல் மருத்துவர் என்ற ரீதியில் சைவ மகா சபை அவருக்கு இந்த விருதை வழங்கியிருக்கின்றது.

குழந்தை பாக்கியம் அற்றோர் பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து இந்தியாவிற்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நிலையில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தாயகத்தில் இவர் ஆற்றிய மருத்துவ பணி மூலமாக பல நூற்றுக்கணக்கான பெற்றோர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில், தென்கயிலை ஆதீன சுவாமிகள் அகத்தியர் அடிகளார், சின்மயா மிசன் யாக்ரத சைதன்ய சுவாமிகள் மற்றும் மருத்துவர்கள், கல்விமான்கள் முன்னிலையில் மருத்துவர் சரவணபவவிற்கு யாழ். அரச அதிபர் நா.வேதநாயன் அன்பே சிவம் விருதை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, நயினாதீவு பிரதேச வைத்தியசாலை போன்றவற்றின் நிர்வாகத்தினர், யாழ். மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம், தியாகி அறக்கொடை நிலைய நிர்வாகத்தினர், பொது அமைப்புக்களின் பிரநிதிகள், குழந்தை பாக்கியம் பெற்ற பெற்றோர்கள் என பலர் வருகை தந்து வைத்திய கலாநிதி சரவணபவவை பாராட்டி வாழ்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி அவரது சேவையை கௌரவித்தனர்.

நான்காவது குழந்தை பெற்று அவர்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டிய தாய்மாரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர். இக்குழந்தைகளை பராமரிப்பதற்கான குறித்த தொகை நிதியும் அவர்களின் பெயரில் வைப்புச்செய்யப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன் சஞ்சிகையை வெளியிட்டுவைக்க தியாகி அறக்கொடை நிறுவுநர் வாமதேவன் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான தொழிநுட்பப் பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒய்வுநிலை விரிவுரையாளர் சி.குணசீலன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.தேவநேசன், சமுதாய மருத்துவத்துறை நிபுணர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமார், சுதேச மருத்துவ திணைக்கள வடமாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி சி.துரைரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியர் ஒருவரின் சிறந்த சேவைக்காக அவரை கௌவரப்படுத்தும் முதல் சம்பவமாக இது அமைந்திருக்கின்றது என நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் கருத்து தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...