சங்குப்பிட்டி பகுதியில் உள்ள வீதி மின்விளக்குகள் குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி மின் விளக்குகள் காட்சி பொருளாகவே காணப்படுகின்றது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிரதேச மக்களின் பொழுதுபோக்கு மிக்க அழகிய பகுதியாக உருவாக்கப்பட்டது. அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியின் இருமருங்கிலும் அழகுபடுத்துவதற்காகவும், அப்பகுதியை வெளிச்சம் ஊட்டுவதற்காகவும் அமைக்கப்பட்ட வீதி மின்விளக்குகள் எரியவில்லை.

பகல் வேளைகளில் இவ்வாறு அழகாக காணப்படுகின்ற போதிலும், இரவு வேளைகளில் இருளடைந்து குறித்த பகுதி காட்சியளிக்கின்றது.

இரவு வேளைகளிலும் குறிப்பிட்ட நேரம் வரை அப்பகுதியில் தமது பொழுது போக்கிற்காகவும், சுற்றுலாவிற்காகவும் வருகைதரும் மக்கள் இருளை கண்டு திரும்பி செல்கின்றனர்.

இயற்கை கடல் அழகுடன் கொண்ட குறித்த பகுதியில் சூரிய அஸ்தமனம் உள்ளிட்ட பல காட்சிகளை காண கூடிய பகுதியாக அப்பகுதி காணப்படுகின்றது. இந்நியைில் அப்பகுதிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

சூரிய ஒளிமூலம் ஒளிரும் குறித்த மின் விளக்குகள் ஒளிராது காணப்படும் நிலையில் அவற்றை சீர் செய்து, குறித்த பகுதியை வெளிச்சமூட்டி அழகுபடுத்தி கொடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.

அப்பகுதி மீண்டும் மின்னொளியூட்டப்பட்டால், சுற்றுலா பயணிகள் அவ்விடத்தில் தரித்து இயற்கையை ரசிப்பதற்கு வழியமைக்க முடியும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

குறிப்பிட்ட சில மின்விளக்குகள் ஒளிர்கின்ற போதிலும், பழுதடைந்துள்ள அனைத்தையும் சீர் செய்து அப்பகுதியை பிரகாசமாக வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். பூநகரி கோட்டை, மண்ணித்தலை, புராத ன சிவாலயம் உள்ளிட்ட பகுதிகளிற்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தருவோர், குறித்த பகுதியில் இயற்கை அழகினையும் ரசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers