உலகம் முழுவதும் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று! எச்சரிக்கும் பேராசிரியர்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முறைகள் தவறினால், உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து இருப்பதாக ஹொங்கொங் அரச சுகாதார பிரிவின் தலைவர் பேராசிரியர் Gabriel Leung எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களை ஒப்பிடும் போது ஒரே வீதம் போல் தெரிந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், அது உலகம் முழுவதும் 60 வீதமானவர்களுக்கு தொற்றக் கூடும். அப்படியான நிலைமை ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் Gabriel Leung எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு வழிகளை கையாண்டாலும் இது பனிப்பாறை போன்ற வைரஸ். நீருக்கு மேல் காணப்படும் பகுதி மாத்திரமே எமக்கு தென்படுகிறது. எனினும் தென்படாத பகுதி மிகவும் பயங்கரமானது. இந்த வைரஸ் நிற்காத அலையாக உலகம் முழுவதும் பரவலாம்.

அத்துடன் சீனா தமது நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக சரியான தகவல்களை வழங்கவில்லை. இது ஒரு விதத்தில் சிக்கலுக்குரிய நிலைமையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக பெருமளவிலான நோயாளிகள் உயிரிழப்பதாகவும் பெயரை குறிப்பிட விரும்பாத சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வைத்தியாசாலை ஒன்றில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.