வவுனியாவில் மைதான காணியை அபகரிக்க வனவள திணைக்களம் முயற்சி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நாலாம் கட்டை பகுதியில் இளைஞர்கள் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்றைய தினம் துப்புரவு செய்ய சென்ற போது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002ம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

பின்னர் 2007ம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில், அதில் சிறிய இராணுவசாவடி ஒன்று அமைக்கப்பட்டு குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்த போதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியை சுத்தம் செய்து மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதியென தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும், திணைக்கள அதிகாரிகளிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகை தந்து இருதரப்புடனும் கலந்துரையாடிய பின்னர் குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளினை எழுத்து மூலமாக வழங்குமாறு தெரிவித்துள்ளதுடன், அதனை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டமைக்கமைய குழப்பம் நிலை முடிவிற்கு வந்துள்ளது.