ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் விஷமிகளின் செயற்பாட்டால் பாரிய தீப்பரவல்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் இன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமான குறித்த காட்டுப்பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

குறித்த தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள் , உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் ஆகியன அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வறட்சியான காலநிலை மலையக பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன.

எனவே இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் ஹட்டன், பொகவந்தலாவ, வட்டவளை, எல்ல, கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத்தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.