நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்திலிருந்து இ.தொ.கா வெளிநடப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்திலிருந்து இ.தொ.கா வெளிநடப்பு செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இணைப்புக்குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதில் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், அரச மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வி.யோகராஜன் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதத்தின் போது தன் மீது தகாத வார்த்தை பிரயோகம் செய்தார் என்ற காரணத்தால் நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வேலுயோகராஜ் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இ.தொ.காவில் அங்கம் வகித்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களான அக்கரபத்தனை பிரதேசசபையின் தலைவர் கதிர்செல்வன், கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாந், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலசந்திரன், மஸ்கெலியா பிரதேசசபையின் தலைவி சென்பகவள்ளி, நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் குழந்தைவேல் ரவி உட்பட அங்கத்தினரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அம்பேவெல பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்றை குறித்த அரச இடம் ஒன்றில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினாலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கட்சி சார்பாக நடத்தும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்ள போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வேலு யோகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கூட்டத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் இணைப்புக்குழு தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதே வேளை கூட்டம் நிறைவடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தன்னுடைய வார்த்தை பிரயோகம் பிழைத்துவிட்டதாகவும் எனவே அதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்ததை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.