கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்.கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யாத்திரிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி 7ம் திகதி பெரு திருவிழா நடைபெறவுள்ள நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மார்ச் மாதம் 6 ம் திகதி அதிகாலை 6 மணி முதல், இரவு 10 மணிவரை கச்சதீவிற்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும், தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்தும், குறிகட்டுவானிற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவிற்கான படகு சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவிற்கான படகு சேவைக் கட்டணமாக, ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவில் இருந்து, கச்சதீவிற்கான கட்டணமாக 250 ரூபாவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில், உணவு மற்றும், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், கடற்படை மற்றும் பொலிஸார், இராணுவம் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள், இந்திய துணைத்தூதுவர், பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Latest Offers