பிரகீத் ஹெக்னேலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு

Report Print Steephen Steephen in சமூகம்
54Shares

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதாக குற்றம் சுமத்தி கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஷம்மி குமாரரத்ன உட்பட9 இராணுவ புலனாய்வு உறுப்பினர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்று சம்பத் அயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சியமாக கூறப்பட்டுள்ள 10 தொலைபேசி அழைப்பு சம்பந்தமான கணனி பொறிமுறையை பரிசோதிக்க குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை 20 ஆம் திகதி முதல் நடத்த நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த வழக்கில் கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் ஷம்மி குமாரரத்ன, டப்ளியூ.டி. உபசேன (சுரேஸ்), ஆர்.எம்.பீ.கே. ராஜபக்ச (நாதன்), எஸ்.எம்.ரவிந்திர ரூபசேன(ரஞ்சி) சமிந்த குமார அபேரத்ன, அய்யாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே,டி.ஈ.ஆர்.பீரிஸ் ஆகிய இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் கிரித்தலே, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் பிரதிவாதிகள், வேறு பெயர் தெரியாத குழுவினருடன் இணைந்து இரகசியமாக தடுத்து வைக்கும் நோக்கில் ஊடகவியலாளர் ஹெக்னேலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர், குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொட காணாமல் போய் 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கடந்த அரசாங்கம் இது சம்பந்தமான வழக்கை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என ஹெக்னேலிகொடவின் மனைவி சந்தியா ஹெக்னேலிகொட அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஹெக்னேலிகொட காணாமல் போனதன் பின்னணியில் அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் அன்றைய அரசாங்கத்தின் பிரதானிகள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தனர்

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஹெக்னேலிகொட காணாமல் போனமை சம்பந்தமான வழக்கு விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் விசாரணைகளை நிறைவு செய்யவில்லை. விசாரணைகளை நிறைவு செய்ய முடியாமல் போனதா அல்லது அதற்கான தேவை இருக்கவில்லை என்பதை தான் அறியவில்லை எனவும் சந்தியா குறிப்பிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை இருந்த நிலைமையை விட மாறான நிலைமை தற்போது ஏற்பட்டுள்து.என்றாவது ஒரு நாள் இந்த மண்ணில் உண்மையையும் நீதியையும் நிறைவேற்றி கொள்வது எனது எதிர்பார்ப்பு எனவும் சந்தியா கூறியிருந்தார்.