கனடாவிலிருந்து வந்த பொதி விவகாரத்தில் சட்டத்தரணி தவராசாவின் வாதத்தால் நீதிமன்றம் விடுத்த கடுமையான உத்தரவு

Report Print Dias Dias in சமூகம்

கஞ்சா கடத்தல் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து விடுதலை செய்யப்பட்ட பொறியியலாளருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்ட ஈடு செலுத்தப்பட வேண்டும் என இன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்திரசிறி கிரியாதெனியவிற்கு கொழும்பு கோட்டை நீதிமன்ற பிரதான நீதவான் ரங்கா திசாநாய இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்தவழக்கில் 60 கிராம் கஞ்சாவை கனடாவிலிருந்து வர்த்தகத்திற்காக கடத்தியதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரியால் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் விசாரணைகளின் பின்னர் விடுதலையான பொறியியலாளரான சிவத்தம்பி மயூரனுக்கே இவ்வாறு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி 60 கிராம் கஞ்சாவை கனடாவிலிருந்து வர்த்தகத்திற்காக கடத்தியதாக சிவத்தம்பி மயூரனுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டை நீருபிப்பதற்கு எந்தவித சான்றுகளும் இன்மையால் எதிரியாக பெயர் குறிப்பிட்ட சிவத்தம்பி மயூரனை நீதிமன்றம் சுற்றவாளியென விடுதலை செய்துள்ளது.

குற்றவியல் சட்ட நடவடிக்கை கோவையின் 136(1) (ஆ) வின் கீழ் கைது செய்யப்பட்ட சந்கேநபருக்கு எதிராக நடாத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான போதிய சான்றுகள் இல்லையெனில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி குற்றவியல் சட்ட நடவடிக்கை கோவையின் 120(3) (ஆ) பிரிவின் கீழ் வழக்கு நடவடிக்கைகளை மீளப்பெறுவதாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிசார் முறையான விசாரணைகளை நடத்தாமல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் இன்மையை நீதிமன்றிற்கு அறிவிக்காமல் கவனயீனமாக செயல்பட்டு போதிய சான்றுகளில்லாமல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இளைஞன் 9 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதுடன் இரண்டு வருடங்கள் இந்த வழக்கு விசாரணைக்கு முகம் கொடுத்ததுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியதுடன் மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குற்றவியல் சட்ட நடவடிக்கை கோவையின் 17(4)பிரிவின் கீழ் ருபா ஐம்பதாயிரத்தை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி சந்திரசிறி கிரியாதெனிய 2020 பங்குனி மாதம் 20ம் திகதி நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு வழங்கும்படி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞனின் சார்பில் சட்டத்தரணி தர்மராஜாவின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers