கஜேந்திரகுமாரின் செயற்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்

Report Print Varunan in சமூகம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட அரசியல் சக்திகள் இன்று தேர்தலை முன்னிறுத்தி களம் இறங்கியிருக்கின்றன என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

இன்று அம்பாறை தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு கருத்து கூறிய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி,

தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்துகிறார்கள்.

தயவு செய்து எங்களது போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். உங்களது தந்தையை நீங்கள் மதிப்பவர் என்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்று போராட்டத்தில் ஈடுபடும் போலியானவர்களைக் கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள்.

எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒருசிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியமித்திருக்கிறார்கள். அவர்களது பின்னணியை பார்த்திருந்தால் அவர்கள் யாருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல.

போராட்ட காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த இறந்தவர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கணவனை வீட்டைவிட்டு விரட்டியவர்களை கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பது உகந்ததல்ல. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை அவரது செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

5 கிலோ அரிசிக்கும் மாவிக்கும் பின் நிற்பவர்கள் அல்ல. நாங்கள் எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள். தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் தங்களோடு வந்து வரவேண்டுமென்று போராடுபவர்கள் என தெரிவித்தள்ளார்.