முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு,தேராவில் பகுதியில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு,தேராவில் பகுதியில் நேற்று மாலை வீட்டில் இருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மாடு பார்க்க சென்றபோது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் தம்பி காயமடைந்த நிலையில் அவரை மீட்கச் சென்ற அண்ணனும் மற்றும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.

தேராவில் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய செல்வக்குமார் தமிழ்வேந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் இவரது தம்பியான 20 வயதுடைய செல்வக்குமார் தமிழின்பன் ஆகிய இருவருமே காயமடைந்து சிகிச்சைக்காக தர்மபுரம் மருத்துவமமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சகோதரர்கள் இருவரும் முழங்கால் பகுதிகளில் குண்டுபட்டு சிதறுண்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேராவில் கிராமத்தில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கியின் பயன்பாட்டாளர்களால் கால்நடை வளர்ப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகவும் இவ்வாறான நடவடிக்கையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கால்நடைகளை மேய்த்துவரும் மக்களின் கால்நடைகள் தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களினால் இறைச்சிக்காக திருடப்படுவது மற்றும் சட்டவிரோத துப்பாக்கி கட்டுபவர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளதை தொடர்ந்து நேற்று இரவு குறித்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ய முற்பட்ட போது சந்தேக நபர் வீட்டில் இருந்து தப்பிசென்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.