வடக்கு ஆளுனருடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கலந்துரையாடல்

Report Print Thileepan Thileepan in சமூகம்
184Shares

வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கத்திற்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் நிலவும் முக்கியமான மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1.ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் புகையிரத கடவை

வவுனியா- யாழ்ப்பாணத்திற்கான புகையிரத வீதி புனரமைப்பின்போது மூடப்பட்ட, ஓமந்தை - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி மக்கள் பாவனைக்காக மீளதிறந்து வைக்கப்படல் வேண்டும்.

2.சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குதல்

நீண்டகாலமாக நியமனங்கள் வழங்கப்படாதுள்ள சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும். இதில் ஏற்கனவே மாகாண சபை இயங்கிய காலத்தில் நேர்முகத்தேர்வு செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சு மற்றும் திறைசேரியின் முகாமைத்துவ சேவை பிரிவினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்

3.பேராறு விவசாயிகளின் காணி

பேராறு குடிநீர்த்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மாற்றுக்காணிகளுக்கான காணி உறுதி இதுவரை வழங்கப்படவில்லை.புனரமைக்கப்பட்ட குளங்களுக்கான நீர்வரத்தை உறுதி செய்தல்

4.வவுனியா பேருந்து நிலையம்

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தால் நகரில் காணப்படும் பழைய பேருந்து நிலையம் இயங்காதுள்ளது. எனவே உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் தரித்துநின்று பயணத்தை மேற்கொள்ள வழிசெய்யப்படல் வேண்டும்.

5.செட்டிகுளம் வயற்காணிகள்

செட்டிகுளம், அருவித்தோட்டத்தில் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய உரிமை கோரப்படாத வயற்காணிகளை அப்பகுதியில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

6. கல்லாறு மீள்குடியேற்றம்

கல்லாறு பகுதியில் 1970 களில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட மேட்டுக்காணிகளை இடம்பெயர்விற்கு பின்னர் தற்போது மீள்குடியேறும் மக்கள் துப்பரவு செய்யும்போது வனவளத்துறையினரால் இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனை கவனத்தில் எடுத்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

7.கல்மடு குளப் பயிர்ச் செய்கை

கல்மடு, பூம்புகார் மற்றும் ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதிகளில் கமநலஅபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட குளங்களுக்கு கீழாக பயிர்ச்செய்கை மேற்கொள்ள வனவளத்திணைக்களம் அனுமதிக்கவேண்டும்.

8.இராசேந்திரங்குளம் ஆலயம்

இராசேந்திரங்குளம் ஆலயப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படல் வேண்டும்

9.பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை

வன்னி மாவட்ட பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்

ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. மேற்படி கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் உறுதியளித்தாக முன்னாள் அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.