வீரர்கள் போட்டியை சண்டையாக மாற்ற வேண்டாம் : மன்னார் நகர முதல்வர்

Report Print Ashik in சமூகம்

எமது வீரர்கள் பலர் தேசிய போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் பல வீரர்களை தேசிய ரீதியில் உள் வாங்குவதற்காக நாங்கள் 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அறிமுகம் செய்துள்ளோம் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இன்று இடம்பெறவுள்ள 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் கிண்ணம் மற்றும் சீருடையை நேற்று அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

குறித்த போட்டியை நாங்கள் கடந்த வருடம் நடாத்த தீர்மானித்து இருந்தோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த வருடம் எப்படியாவது இப்போட்டியை நடாத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எங்களுக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து உரிமையாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுடன் கூட இருந்து எங்களுக்கு ஏனைய விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கிய எமது லீக் நிர்வாகத்தினர் மற்றும் வெளியில் இருந்து எங்களுக்கு பல்வேறு பட்ட ஆலோசனைகளை வழங்கிய ஏனைய உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

மன்னார் பிரிமீயர் லீக் போட்டியானது எமது உதைப்பந்தாட்ட போட்டியாளர்களை தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் இந்த போட்டியை ஆரம்பித்து இருக்கின்றோம்.

இதன் முதல் அத்திவாரம் தான் இப்போட்டியின் மன்னார் பிரிமீயர் லீக். இதற்கு அடுத்த கட்ட போட்டிகளுக்கு நாங்கள் ஒரு அணியாக செல்வதற்கான எற்பாடுகளை இப் போட்டியினூடாக செய்வோம்.

அதே போன்று எமது வீரர்கள் பலர் தேசிய போட்டிகளில் விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.இன்னும் பல வீரர்களை தேசிய ரீதியில் உள் வாங்குவதற்காக நாங்கள் இப்போட்டியை அறிமுகம் செய்துள்ளோம்.

ஒவ்வொரு வீரர்களும் ஒழுக்கத்துடன் போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

அதே போன்று அணியின் உரிமையாளர்கள், ஆதரவாளர்களை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். எமது நோக்கம் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர உதைபந்தாட்டத்தை மழுங்கடிப்பதற்கு அல்ல.

வீரர்கள் போட்டியின் போது போட்டித் தன்மையுடன் விளையாட வேண்டும்.

போட்டியை போட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். போட்டியை சண்டையாக மாற்ற வேண்டாம்.இரண்டு வீரர்களுக்கு இடையில் மைதானத்தில் ஏற்படுகின்ற கருத்து முரண்பாட்டினால் போட்டியை இடை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

எமது மாவட்டத்திலும் பல உதாரணங்கள் உள்ளது.எனவே போட்டியை போட்டியாக எடுத்துக் கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.