இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் தனி வீடமைப்புக்கு அடிக்கல் நாட்டு விழா

Report Print Thirumal Thirumal in சமூகம்

இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிக்கல் நாட்டும் வைபவம் முதற்கட்டமாக இன்று நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் - வெலிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இத்தனி வீடுகள் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்புக்கள் மற்றும் குடிநீர் வசதிகள், வீதி மற்றும் வடிகாலமைப்பு போன்றன சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார். அத்தோடு இலங்கைக்கான இந்திய உதவி தூதுவர் திரேந்திர சிங் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி பயிர் செய்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட தொடர் வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கும் இன்றைய தினத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.