நோர்வூட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் ஏழு குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை! 40 பேர் வெளியேற்றம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இதன் காரணமாக குறித்த வீடுகளில் குடியிருந்த 7 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயை அணைக்க அக்கம்பக்கத்தினர் முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரியவருகிறது.

அதனையடுத்து நோர்வூட் பொலிஸார் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுமார் 3 மணித்தியாலங்களின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியானஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், தோட்ட வைத்தியசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், நோர்வூட் பிரதேசசபையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாள பிரிவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.