முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள்: மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்தனை, பெயித்திலி தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவு, கல்லூரி நிர்வாகம் என சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தோட்ட மக்கள் உளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

பத்தனை பெயித்திலி தோட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் இத்தோட்டத்திலுள்ள வடிகானுக்கு வந்த பிறகே பிரதான ஆற்றை நோக்கி செல்கின்றன.

இதனால் குறித்த தோட்ட மக்கள் சுகாதார ரீதியில் பல அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதுடன், சுழல், வளி என்பனவும் மாசடைகின்றன.

அதுமட்டுமல்ல சிறுவர் பராமரிப்பு நிலையமும் வடிகானை அண்டிய பகுதியிலேயே அமைந்துள்ளதால் சிறார்களும் அடிக்கடி நோய்வாய் படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சுகாதாரப் பரிசோதகரிடம் வினவியபோது,

மக்களின் முறைப்பாடு தொடர்பில் கல்லூரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.