புளியங்கண்டலடி கிராமத்தில் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

Report Print Kumar in சமூகம்

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வுகள் இன்றைய தினம் புளியங்கண்டலடி பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தன.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வாகரை, புளியங்கண்டலடி கிராமத்தில் உள்ள பிரதான பாதைகள் பல சிதைவடைந்தமை, மணல் வீதிகளாக உள்ளமை போன்றவற்றால் பொதுமக்கள் தமது அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீதிகளை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து ஊரக எழுச்சித் திட்டம் மற்றும் பன்முகபடுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டங்களின் ஊடாக 20 இலட்சம் ரூபா பெறுமதியில் புளியங்கண்டலடி விவேகானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகியவை கொங்றீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே அந்த வீதிகள் இன்று பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், தமிழரசுக் கட்சியின் வாகரை பிரதேச வாலிபர் முன்னணியின் பிரதேச இணைப்பாளர் அலெக்ஸ் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரமுகர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஏழு இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட சால்ஸ் விளையாட்டு மைதானம், நான்கு இலட்சம் ரூபா பெறுமதியில் புனரமைக்கப்பட்ட வாகரை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் என்பன பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.