ரெலோவின் 50ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் குழப்பம்! ஒருவர் வைத்தியசாலையில் - இருவர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டதாகவும், இதனையடுத்து அவர்களுக்கும் ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அங்கு வந்த குறித்த இளைஞர்கள் ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனுடைய படத்தை ஏன் காட்சிப்படுத்தவில்லை.

யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தில் இரு இளைஞர்களை புளொட் அமைப்பினர் சுட்டுக்கொன்றிருந்தனர், தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனை கூப்பிட்டு விழா செய்கிறீர்களா என தர்க்கம் விளைவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸாரின் துணையுடன் நிலைமையை கட்டுப்படுத்தியதுடன், தாக்கப்பட்டதாக கூறி ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றபோது அங்கு நின்ற அரச அதிகாரி ஒருவர் மாவை சேனாதிராஜாவை பார்த்து இவர் ஏன் இங்கு வந்தவர், யார் இவரை கூப்பிட்டது என சத்தம் எழுப்பிய நிலையில் ஏற்பாட்டாளர்கள் சமரசப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.