பல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Rakesh in சமூகம்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் மற்றும் தரவுகளை இணைப்பு வழங்குநரான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தொழிநுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த குற்றச்செயல் தொடர்பான அறிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழிநுட்பப்பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விசாரணைக்கு மேலதிகமாக குற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழிநுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அந்த முறைப்பாட்டில் குற்றச்செயல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் அலைபேசி இலக்கங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டில் கோரப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் - தரவுகளை அவற்றின் இணைப்பு வழங்குநர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் குற்றச்செயல் ஒன்று தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் - தரவுகள் அறிக்கையை வழங்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா, அலைபேசி இணைப்பு வழங்குநர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.