இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Report Print Yathu in சமூகம்

இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களான மன்னார் பகுதியை சேர்ந்த லூவாஸ் அலோசியஸ், அந்தோனி சுகந், சகாய வினிஸ்ரோ ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய விசைபடகில் இருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த லட்சுமணன், தியோனியஸ், சர்வேஸ்வரன் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, கைது செய்யப்பட்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்க கட்டிகளை கடத்தி வந்து தங்களிடம் கொடுக்கும் போது கடற்படை ஹெலிகொப்டர் வந்ததால் தாங்கள் விசைபடகுடன் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து ஒன்று சுமார் 100 கிராம் வீதம், 3 .5 கிலோ நிறையுடைய 35 தங்க கட்டிகளை தலைமன்னாரில் இருந்து கடத்தி வந்ததாகவும் கடற்படை கைது செய்ததால் தங்கத்தை படகில் மறைத்து வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

படகில் ரகசிய அறையில் பதுக்கி வைத்து இருந்த தங்கத்தை பறிமுதல் செய்த ராமேஸ்வரம் பொலிஸார் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்ப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.